- குங்குமம் இதழில் நிருபராக இருந்த சமயம், ஊரில் என் தாய்மாமா இறந்துவிட்டார். நடுத்தர வயதில் அகால மரணம். துக்கத்துக்குப் போயிருந்தேன். கூடி அழுதவர்களில் யாரோ ஒருவர், "ஆயுசு கெட்டி"ன்னு போனவாரம்தானே ஜோசியக்காரன் சொன்னான்" என்று அரற்ற.. எனக்குள் ஸ்பார்க்.
மரணமடைந்தவரின் ஜாதகத்தை பிரபல ஜோதிடர்களிடம் கொடுத்து பலன் கணிக்கச் சொன்னால் என்ன..
ஐடியாவை உடனே செயல்படுத்த என் அம்மாவை அணுகினேன். விசயத்தைச் சொன
்னேன். அம்மா ரெண்டே வார்த்தைதான் சொன்னது: "செருப்பால அடிப்பேன்!"
சரி, இது வேலைக்கு ஆகாது... என்ன செய்யலாம்...
தனது மூன்று வயதில் இறந்துபோன என் தம்பி பாரியின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரைப் பொறுத்தவரை எதுவும் வீண் அல்ல... நான் உட்பட.
நம்பிக்கையுடன் பரணில் ஏறி, தம்பியின் ஜாதகத்தைத் தேடினேன். ஊஹீம்... உடம்பு முழுசும் ஒட்டடை படிந்ததுதான் மிச்சம்.
அன்று இரவு சென்னை திரும்பினேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாரிடமும் நாசூக்காக விசாரித்தேன் - "சமீபத்தில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது நடுத்தரவயதுக்காரர் மரணமடைந்திருக்கிறாரா.." என்பதுதான் விசாரணையின் அடி நாதம்.
பெரும்பாடு பட்டும் கிடைக்கவில்லை. மற்ற பேட்டிகளை எடுத்துக்கொண்டே ஜாதகம் தேடும் முயற்சியையும் தொடர்ந்தேன்.... உ.வே.சா., ஓலைச்சுவடியைத் தேடி அலைந்தமாதிரி! (தமிழன்பர்கள் மன்னிக்க!)
அப்போதுதான் செல்வம் என்ற என் நண்பர், அவரது நண்பர் ... நடுத்தரவயதுக்காரர்... அகால மரணடைந்ததை எதார்த்தமாக சொன்னார். செல்வத்திடம் என் கோரிக்கையை வைத்தேன். மிகுந்த யோசனைக்குப் பிறகு, "கேட்டுப்பார்க்கிறேன்" என்றார்.
"கிடைக்குமா கிடைக்காதா" என்ற தவிப்பிலேயே நாட்கள் நகர்ந்தன.
ஒரு வாரம் ஆகியிருக்கும்... தேடி வந்து ஜாதகம் கொடுத்தார் செல்வம்.
கிடைத்தது பொக்கிசம்.
அப்போது மாலன் சார், சிறப்பாசிரியர். அவரிடம் விசயத்தைச் சொல்லி அனுமதி வாங்கினேன்.
ஜாதகத்தை பத்து பன்னிரண்டு பிரதி எடுத்து, புகழ் பெற்ற ஜோதிடர்களிடம் கொடுத்தேன்.
"சார், இது ஒரு வி.ஐ.பி. ஜாதகம். இவர் யார், அவரோடு எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்லணும்" என்றேன்.
ஒரு சிலர், "இப்போ டைம் இல்லையே" என்று ஜகா வாங்கினர். வேறு சிலர், "ஆள் யார்னு தெரியாம ஜாதகம் கணிக்கக்கூடாது" என்று லாஜிக்காக (!) பதில் சொல்லி எஸ்கேப் ஆனார்கள். ஆனாலும் ஐந்தாறு பிரபலஸ்தர்கள் ஜாதகத்தைக் கணிக்க ஒப்புக்கொண்டார்கள்.
("என் ஃபோட்டோ போடுவீங்கள்ல.."
"கண்டிப்பா!")
ஒரு ஜோதிடர் , "இவர் யார்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன்" என்று அடிக்குரலில் கேட்டார்.
"எனக்குத் தெரியாது சார். ஆபீஸ்ல கொடுத்தாங்க" என்றேன்.
அடுத்த சில நாட்களில் ஜாதகம் கணித்தவர்களை அணுகி, சேகரம் செய்தேன்.
ஒருவர், "இவர் ஒரு நடிகர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ஆவார்" என்று கணித்திருந்தார். "இவர் ஸ்போர்ட்ஸ் மேன்" என்று தனது கண்டுபிடிப்பைச் சொல்லியிருந்தார் இன்னெருவர்.
ஒருவர் கூட யாரும் அந்த "இவர்" செய்த தொழிலையோ, இறந்துவிட்டார் என்பதையோ கணிக்கவே இல்லை.
அடுத்தவார இதழில்,
ஜோதிடர்களின் கணிப்புகளை வரிசையாக வெளியிட்டு,
"உண்மையில் இந்த வி.ஐ.பி. யார்... இத்தனாம் பக்கம் பார்க்க" என்று அறிவிப்பு வைத்தோம்.அந்தப் பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் இறந்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டோம்.
லோக்கல் பஞ்சாயத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி வரை பதவிக்கு வருபவர்களை எல்லாம் "முன்பே கணித்தேன்" என்று, பின்பு விளம்பரம் செய்பவர்கள் அந்த ஜோதிடர்கள்.
அவர்கள் யாரும் தங்கள் கணிப்புக்கு மறுப்போ விளக்கமோ சொல்லவே இல்லை என்பதுதான் இன்னும் விசேசம்.
இறந்தவர் ஜாதகத்தை கொடுத்து பேருதவி செய்த நண்பர் செல்வம்தான், தற்போது சிநேகன் என்ற பெயரில் திரைப்பாடலாசிரியராகவும், நடிகராகவும் இருக்கிறார்.
திங்கள், 24 செப்டம்பர், 2012
ஜோதிடம் உண்மையா..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சோதிடம் ...நீங்கள் சொன்னது சரி என றே வைத்துக்கொள்வோம் ஓலை சோதிடத்தில் விரல் ரேகையை வைதது பெயர் தந்தை,தாய்,மனைவி பெயர்களை கூட சரியாக சொல்கிறார களே அது எப்படி
பதிலளிநீக்கு.