திங்கள், 24 செப்டம்பர், 2012

ஒரு ஞாபக மறதிக்காரனின் டைரிக் குறிப்பு


குமுதம் வார இதழில் நிருபனாக பணியாற்றிய சமயம்.... (1997 அல்லது 8) விழுப்புரம் அருகே பழமையான கோயில் ஒன்றின் அர்ச்சகர், அந்தக் கோயிலை இழுத்து மூடிவிட்டார் என்ற தகவல் கிடைத்தது.
தமிழகத்தின் முதல், "கோயில் கதவடைப்பு". லட்டு மாதிரி செய்தி.
மறு நாளே புகைப்படக்காரர் சித்ராமனியின் ஜூனியரை அழைத்துக்கொண்டு, சென்னையிலிருந்து விழுப்புரம் பயணம் ஆனேன். விடியற்காலையில் புற
ப்பட்டு பத்துமணி சுமாருக்கு விழுப்புரம் வந்தோம்.
சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த ஊர் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், யாருக்கும் தெரியவில்லை. சரி, அருகில் இருக்கும் கோயில்களில் விசாரிக்கலாம் என்று புறப்பட்டோம். விழுப்புரத்தில் கோயில் கோயிலாக அலைந்தோம். நான்கைந்து கோயில்களுக்கு சென்று விசாரித்ததில், ஒருவர் "அந்த ஊர், விழுப்புரம்- பாண்டிச்சேரி வழித்தடத்தில் இருக்கிறது. குறிப்பாக எங்கே என்று தெரியவில்லை" என்றார்.
. "இது போதும் அய்யா" என்று வணக்கம் வைத்துவிட்டு, மீண்டும் பேருந்து நிலையம் வந்து பாண்டிச்சேரி பேருந்தில் ஏறினோம். நடத்துனரோ, "அப்படி ஒரு ஊரே கிடையாது" என்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனாலும் பாண்டிச்சேரிக்கு இரண்டு சீட்டு வாங்கிவிட்டேன்.
பயணத்தின் இடையில் ஏறியவர்கள் அனைவரிடம் அந்த குறிப்பிட்ட ஊரைப் பற்றி விசாரித்தால், நெற்றிச் சுருக்கமும், உதட்டு பிதுக்கலுமே பதிலாக வந்தன.
பாண்டிச்சேரியும் வந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனாலும் விசாரிப்பு தொடர்ந்தது. ஒருவர், "விழுப்புரம் - பாண்டிச்சேரி வழிகள் இரண்டு இருக்கு. இரண்டாவது தடத்தில அந்த ஊர் இருக்கு" என்றார். ஆக நாங்கள்தான் வழி மாறி வந்துவிட்டோம்.
சரி, ஊரைக் கண்டுபிடித்தாயிற்று. பிராண்டும் வயிற்றை அடக்குவோம் என்று திட்டமிட்டோம். எங்களுக்குத் தகவல் சொன்னவர், "அந்த தடத்துல வண்டிங்க குறைவு. அதோ கிளம்புது பாருங்க... அந்த வண்டியை விட்டா அப்புறம் நாலு மணி நேரம் ஆகும்" என்று சொல்ல...
பசி மறந்து, ஓடிப்போய் பேருந்தில் ஏறினோம்.
நடத்துனரிடம் ஒரு முறைக்கு நான்குமுறை விசாரித்து சீட்டு வாங்கினேன். புகைப்படக்காரரின் கண்கள் பசி, பசி என்றன. எனக்கும்தான்.
"இறங்கியவுடனே முதல் வேலை சாப்பிடறதுதான்" என்று அவருக்கு ஆறுதலாகச் சொன்னேன்...
குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்து நிற்க, இறங்கிய எங்களுக்கு அதிர்ச்சி.
இரு புறமும் வெறும் வயல்காடு. டீ கடை கூட கிடையாது. நாம் வர வேண்டிய ஊர் இதுதானா என்று சந்தேகம் வேறு வயிற்றைப் பிசைய ஆரம்பித்துவிட்டது.
அப்போது இந்த செல்போன் கருமம் எல்லாம் அவ்வளவாக பிரபலம் கிடையாது. யாரை விசாரிப்பது என்று புரியாமல் தவித்து நின்றோம்.
கொஞ்ச நேரத்தில் அந்தப் பக்கமாக தலைச்சுமையுடன் ஒரு பெரியவர் வர, அவரிடம் விசாரித்தோம்.
"அந்த ஊரா, அது இப்படியே ரெண்டு கல்லு தொலைவு போகணும்" என்றார்.
"நடப்போம்" என்றேன் புகைப்படக்காரரிடம். தலைச்சுமைக்காரர் ரெண்டு கல்லு என்றார். ஆனால் வழி எல்லாம் கல்லுதான். நொந்து நூலாகி, ஊர் வந்து சேர்ந்தோம். பத்து, பதினைந்து வீடுகள் இருக்கும். அர்ச்சகர் வீட்டை விசாரித்துப் போனோம். ஜன்னல் உடைந்த ஓட்டு வீடு. இரண்டு முறை குரல் கொடுத்த பிறகு பதினேழு பதினெட்டு வயது பெண் ஒன்று எட்டிப் பார்த்தது. விவரத்தைச் சொல்லி, "அர்ச்சகரை பார்க்கணும்" என்றேன்.
"அப்பா வெளியே போயிருக்காங்க" என்ற அந்த பெண், இரண்டு தடுக்குகளை எடுத்து திண்ணையில் போட்டு "உட்காருங்க" என்றது. மீண்டும் உள்ளே சென்று இரண்டு குவளைகளில் நீர் எடுத்து வந்து கொடுத்தது.
பசி, தாகம், அலைச்சல்... எல்லாம் சேர்ந்து உடலே சோர்ந்திருந்தது. தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.
"இந்த அர்ச்சகர் எப்போ வருவாரோ" என்ற சிந்தனையோடு, பக்கத்தில் இருந்த அந்த குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்றோம். புகைப்படங்கள் எடுத்தார் போட்டோகிராபர். நான், அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கோயிலை கதவடைப்பு செய்ததற்கான காரணங்களை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டேன். மீண்டும் அர்ச்சகர் வீட்டுக்கு வந்தோம். அவர் வந்தவுடன் பேட்டி எடுத்துவிட்டு, விழுப்புரம் போய் நன்றாக சாப்பிட வேண்டும்.
பையில் பணம் இருந்தாலும் பட்டினியாய் கிடப்பது பத்திரிகை வாழ்வில் சகஜம்தான். ஆனால் அன்று ஏனோ எல்லை கடந்த பசி.
நாங்கள் திண்ணையில் உட்கார்ந்திருக்க... வீட்டில் ஏதோ பாத்திரங்கள் உருளும் கடமுடா சத்தம். கொஞ்ச நேரத்தில் கமகம வாசனை... நானும் புகைப்படக்காரரும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொண்டோம்.
ரெண்டு பேரு பசியில காயிறோம். மணக்க மணக்க சாப்பாடு உள்ளே... என்கிற எண்ணம்தான். பசியோடு சேர்ந்து எரிச்சலும், கோபமும் அதிகமாகிக்கொண்டே வந்தது.
அர்ச்சகர் வந்துதொலைக்கட்டும் என்று இருவரும் காத்திருந்தோம். அவர் வருதாயில்லை. பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், மீண்டும் வீட்டுக் கதவு திறந்தது. அந்தப் பெண்தான்.
"வாங்க" என்றது. "பின்பக்க வழியாக அர்ச்சகர் வந்திருப்பாரோ" என்ற நினைப்பில் நானும் புகைப்படக்காரரும் உள்ளே செல்ல... இரண்டு தடுக்குகள் போடப்பட்டு எதிரே வாழை இலையில் உப்புமாவும் ஓரத்தில் வெள்ளை சர்க்கரையும் வைக்கப்பட்டிருந்தன.
அந்நிய வீட்டில் சாப்பிடச் சொன்னால் பிகு பண்ணும் ரகம்தான் நாங்கள். ஆனால் எதுவும் பேசாமல் உட்கார்ந்து சாப்பிட்டோம், சாப்பிட்டோம், சாப்பிட்டோம்.
சாப்பாட்டு வகையில் என் பிளாக் லிஸ்டில் முதலிடம் வகிப்பது இந்த உப்புமாதான். எனக்கு பயந்தே அம்மா உயிரோடு இருந்தவரை உப்புமா செய்ததே இல்லை.
இன்று ருசித்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் வயிறோடு சேர்ந்து மனமும் நிறைந்திருந்தது எங்களுக்கு. அந்த பெண், எங்களிடம் "சாப்பிடுறீங்களா" என்று கேட்கவே இல்லை. எங்கள் முகம் பார்த்து பசி உணர்ந்திருக்கிறது அந்த சின்னப் பெண். பசியில் கிடந்து பிறகு அள்ளி அள்ளித்திண்ணும் அனுபவம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உப்புமா அளவுக்கு எதுவும் எனக்கு திருப்தி தந்ததில்லை.
பிறகு அர்ச்சகர் வந்தார் அவரிடம், கோயிலை அடைத்ததுக்கான காரணம் கேட்டேன். பல மாதங்களாக அறநிலையத் துறையிலிருந்து சம்பளம் வரவில்லை என்றார். அவரது மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா, இருநூறோ முன்னூறோ... அதோடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சில நெல் மூட்டைகள் தரப்படுமாம். தற்போது அதுவும் வராத நிலையில், கோயிலை கதவடைப்பு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இப்போது அந்தப் பெண் மீது எனக்கு இன்னமும் மரியாதை கூடியது. கடும் வறுமையிலும் எங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிறது.
பெயர் என்ன என்று கேட்டேன். பத்மா என்று சொன்னது.
பிறகு நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம். அடுத்த வாரம் குமுதம் இதழில் அர்ச்சகரின் பேட்டி கட்டுரை வெளிவந்தது.
பொதுவாகவே நான் அடுத்தடுத்த வாரங்களிலேயே வாழ்கிறவன். எடுத்த பேட்டி பற்றி ஃபீட் பேக் கேட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதில்லை. அடுத்த இதழு்க்கான பேட்டி கட்டுரைகள், அதற்கான ஆட்கள் என்று என் தேடல் துவங்கிவிடும். ஆகவே அந்த ஊர், அர்ச்சகர் பெயர் எல்லாம் மறந்துவிட்டேன்.
பத்மா என்கிற அந்த சிறு பெண்ணை... தாயை... மட்டும் மறக்கவே முடியவில்லை

7 கருத்துகள்:

 1. எதுவும் நமக்கு இதுபோன்ற தருணங்களில் பசியறிந்து அப்பெண் உணவு தந்தது தமது எண்ணத்தின் மேன்மையை நமக்கு பறைசாற்றியிருக்கிறாள் ஆனால் இன்றைக்கு தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை இது நடுத்தர டவுன் வரை இதே நிலைதான் கிராமங்களிலும் 40சதவீதம் மாறிவிட்டது... உலகமயமாக்கள் இப்போது உள்ளத்தையும் கலவாடிவிட்டது.

  பதிலளிநீக்கு
 2. "உள்ளத்தையும் களவாடிவிட்டது உலகமயமாக்கல்" - சத்தியமான வார்த்தைகள்.எனது சிறு வயதில், வழிகேட்டு வருபர்களை, திண்ணையில் அமரவைத்து மோர் கொடுத்து, வழி சொல்வது வழக்கம். இப்போது வழி கேட்டால் உதட்டுப்பிதுக்கல்தான் பதிலாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 3. எங்கிருந்தாலும் பத்மா நலமுடன் வாழ பரார்த்திப்போம்
  anbudan, S.Sundar

  பதிலளிநீக்கு
 4. எவ்வளவு பெரிய மனம் அந்த சிறு பெண்ணிற்கு ...
  ரொம்ப நல்ல பதிவு....

  பதிலளிநீக்கு
 5. கிராமங்களில் தான் தெரியாதவருக்கும் விருந்தளிக்கும் தமிழரின் பண்பாடு உயிர்ப்புடன் உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. உங்கள்கட்டுரையில் நாங்ககளுமே உங்களோடு ,அந்தப்பசியோடே இருக்கும் உணர்வை உண்டாக்கிவிட்டீர்கள் .உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றார்கள் .உப்புமா இட்டவரை உலகம் உள்ளளவு நினைக்க வைத்துவிட்டீர்கள் ..நல்லசெய்தி .தொடருங்கள் ..தொடர்கிறோம் .

  பதிலளிநீக்கு
 7. நல்லது செய்தவரை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவார்கள் நகரத்து /
  (நரகத்து)மனிதர்கள் .அவ்வாறு நின்றஅனுபவம் எனக்குண்டு .இன்னும் வலிக்கிறது .

  பதிலளிநீக்கு