திங்கள், 24 செப்டம்பர், 2012

தள்ளாடிய நினைவுகள்



"அய்யய்யோ!" "சந்தோசம்" "நெசமா" "தொடரட்டும்" "நம்பவே முடியல" "ஏதும் பிரச்சினையா" 

- "குடிப்பதை விட்டுவிட்டேன்" என்றவுடன் நண்பர்கள் ஆற்றிய எதிர் வினை (!)களில் சிலதான் இவை.

நாலு கழுதை வயதில் பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னை வந்தவுடன் துவங்கியது குடிப்பழக்கம். ஆரம்பத்தில் கட்டிங்தான். நண்பர்களின் ஊக்கப்படுத்தியதால் மெல்ல மெல்ல அதிகரித்தது. பழகப்பழக இனித்தது.

தமிழ் வார இதழ்கள் போலவே, எங்கள் குழாமி
ல், நான்கைந்து "நெம்.ஒன்"கள் இருந்தார்கள். குடிப்பதில் அவ்வளவு போட்டி.

சீக்கிரமே நானும் முதல் நிலைக்கு வந்தேன்.
மாலையில் குடிப்பது நிச்சயம், காலை முதல் குடிப்பது லட்சியம் என்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்தேன்.
சினிமா விமர்சனம் ஒன்றுக்கு நான் எழுதிய ஒரு வாக்கியம் பிடித்துப்போய் சாவி சார் ஐம்பது ரூபாய் கொடுத்தார். (பொற்காலம் படத்தில்... :ஊமைப்பெண்ணாக வரும் ராஜேஸ்வரி பேசப்படுவார்: )
நல்ல மனிதனாக இருந்தால் அந்த ரூபாயைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
நான் அந்த காசிலும் குடித்தேன்.... மேலும் மேலும்!
தொடர்ந்து குடி.
பிச்சைக்காரனுக்கு ஐநூறு ரூபாய் போட்டு... , ஆத்ம நண்பனை அடித்து... :நயம்: குடிகாரன் ஆனேன்.
ஆயிற்று பதினைந்து வருடங்கள். பல பத்திரிகைகள், பல ஊர்கள், பற்பல பார்கள்.
இடையில் என்னையும் நம்பி ஒருத்தி.... வாடிய பயிராய். வயிற்றில் குழந்தை.
எத்தனையோ செருப்படி பட்டபின்னும் தொடர்ந்து குடித்தவன் யோசிக்க ஆரம்பித்தேன். குடியை நிறுத்தினேன். பலரும் சொல்வது போல குடியை நிறுத்துவது ஒன்றும் ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பெரிய விசயம் எல்லாம் கிடையாது நண்பர்களே....
ஒரு வேளை நீங்கள் குடிப்பவராக இருந்தால்... நிறுத்திப் பாருங்கள்.... மது தரும் போதையை விட, "மனத்தெம்பு" தரும் திருப்தி அலாதியானது.
எனது சந்தேகம் எல்லாம் ஒன்றுதான்.
"மக்கள் புரட்சி செய்யும் மன நிலையில் இருந்தால், ஏராளமான மதுக்கடைகளைத் திற" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன்.
புரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள் என்பதுதான் எனக்குள் சுற்றும் கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக